புதன், 7 பிப்ரவரி, 2018

நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி சுற்றுவட்டாரம்) நெசவினை தொழிலாக கொண்ட முஸ்லீம்கள் வாழும் "அஞ்சுவண்ணம் தெரு" பற்றிய நாவல் தான் இது. மீரான் அவர்கள் எழுதிய "கூனன் தோப்பு", "துறைமுகம்" இரண்டு நாவல்களையும் இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். வழக்கமான மொழிநடையில் இல்லாமல் வட்டார வழக்கு மொழியைக் கொண்ட அவரது நாவல்கள் முதலில் வாசிக்கும் போது கடினமாகவும், மிக மெதுவாக படிக்கும்படியும் இருந்தது. ஆனால் அந்த இரண்டு நாவல்களை படிக்கும் போதும் பாதியில் நிறுத்திவிடவில்லை. காரணம், எனக்கு கடினமாக தோன்றிய அந்த மொழிநடையைத் தாண்டி சுவாரசியமான கதைசொல்லியாக தோப்பில் முஹம்மது மீரான் தோன்றினார். அதனாலேயே இந்த முறை அஞ்சுவண்ணம் தெருவினை வாசிக்கத் தொடங்கினேன். 


நாவலின் மையக்கதாபாத்திரமான அஞ்சுவண்ணம் தெரு பற்றிய ஆதி வரலாறோடு தொடங்குகிறது நாவல். மலையாளத்து மஹாராஜா ஐந்து முஸ்லீம் நெசவாளர் குடும்பங்களை குடியமர்த்தி பிறகு ஜனங்கள் பெருகி பல தெருக்கள் உருவாகிறது. ஊர்வலத்தின் போது  கண்ணில் படும் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் மஹாராஜாவை எதிர்க்க முடியாத அந்த பெண்ணின் தந்தை, அப்பெண்ணை உயிரோடு மண்ணில் புதைத்து விட அவள் பிற்பாடு எல்லோராலும் தெய்வமாக வணங்கப்படுகிறாள். இப்படி முதன்முதலில் உருவான அஞ்சுவண்ண தெரு பற்றியும், அங்கே உயிரோடு அடக்கம் செய்யப்பட்ட "தாய்" பற்றியும் சுவாரசியமான பின்னணிக் கதை சொல்லப்படுகிறது. அஞ்சுவண்ண தெரு பள்ளிவாசலை விட உயரமாக கட்டப்பட்ட பாழடைந்த வீட்டை வாங்கி "தாருல் சாஹினா" என பெயர் மாற்றி அங்கு குடிவரும் மேற்கத்திக்காரர் குடும்பம், அதை வாங்கிக் கொடுத்த வாப்பா எனும் கதாப்பாத்திரம்,  தெருவில் இருக்கும் குழாயடியை தன் வசமாக்கி வாயை ஆயுதமாக பயன்படுத்தி வாழும் மம்மதும்மா, அடக்கம் செய்யப்பட்ட தாய் கனவில் தோன்றவும் ஒரே நாளில் கடல், மலை தாண்டி தன் ஜின் உதவியுடன் வந்து தாயின் சமாதி அருகே மஸ்ஜித்  கட்டி கொடுக்கும் மஹமூதப்பா,  ஒற்றை ஆளாக மஹமூதப்பா தைக்காப் பள்ளியில் நேரம் தவறாமல் நைந்த செருப்புடன் இழுத்து இழுத்து நடந்து வந்து  பாங்கு ஓதும்  மைதீன் பிச்சை மோதீன், "மொஹராஜ் மாலை" எனும் காப்பியம் படைத்த ஆலிப்புலவர் மற்றும் அவர் வம்சாவளி குவாஜா அப்துல் லத்தீப் ஹஜ்ரத், மதத்தை வைத்து பணம் சம்பாதிக்க முயலும்  சீக்கா சாவுல் எனும் அனைவருக்கும் ஒரு பின்னணிக் கதை என நாவல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

மதத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் எப்படி இடைத்தரகர்களால் வணிகமாக்கப்படுகிறது என்பது குறித்து எள்ளல் நடையில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இங்கே இஸ்லாம் மதத்தை வைத்தே சொல்லியிருந்தாலும் எல்லா மதத்திலும் இப்படி தான் என்பது உரைக்காமல் இருக்கவில்லை. 

நாவலில் பெரும்பாலான இடங்களில் அரபி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் அர்த்தத்தை நினைவில் வைத்துக் கொண்டு வாசிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும் முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்ற பொதுப் பார்வையின் மீதான விமர்சனமாக சில இடங்களை பேசியிருக்கிறார். கேரள எல்லையில் நடைபெறும் உணவுப் பொருட்கள் கடத்தல் காரணமாக சாதாரணமாக நாம் வாங்கும் அரிசி, சர்க்கரை என்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வளவு திண்டாட வேண்டியிருக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார். மீரான் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு ஒரே நேரத்தில் வாசிப்பதற்கு (மிக மிக கொஞ்சமே) சிரமமாகவும், இடைவிடாமல் வாசிக்க தூண்டும் ஆர்வத்தினை கொடுப்பதாகவும் இருக்கிறது.

தோப்பில் முஹம்மது மீரான் உருவாக்கிய "அஞ்சு வண்ணம் தெரு" இடிந்த சுவர்களை கொண்ட தைக்காப் பள்ளியோடும், அதன் அருகே "தாருல் சாஹினா"வோடும், வயதாகி போன சிங்கமாக திண்ணையில் சுருண்டு  கிடக்கும் மம்மதும்மாவோடும்  இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

Posted on முற்பகல் 10:49 by Elaya Raja

No comments

செவ்வாய், 30 ஜனவரி, 2018

இந்த புத்தகத்தை படிக்கும்படி என்னை தூண்டியது இதன் தலைப்பு தான். காரணம் நான் “மரண தண்டனை” வேண்டும் என்ற கருத்துடையவன். டெல்லி கற்பழிப்பையும், சிறுமியைக் கற்பழித்து எரித்துக் கொன்றுவிட்டு சிறை சென்று பெயிலில் வெளியே வந்து தன் தாயையும் கொன்ற தஷ்வந்த் போன்ற ஈவு இரக்கமில்லாத கொடூரர்களை கொண்ட நாட்டில் எப்படி “மரண தண்டனையை” ரத்து செய்ய முடியும். செய்த குற்றத்திற்கு வேறு என்ன தண்டனையைக் கொடுத்து அவர்களின் கொலை வெறிக்குப் பலியான “அப்பாவிகளின்” இறப்பிற்கு நியாயம் செய்ய முடியும். இது போன்ற கருத்துகள் கொண்ட நான், “அப்படி என்னதான் சொல்லி மரண தண்டனை வேண்டாம்ன்னு சொல்றான்னு பாப்போம்” என்ற முடிவுடனே படிக்கத் தொடங்கினேன்.


ஆல்பெர் காம்யு (Albert camus) இந்த புத்தகத்தை எழுதியது 1959. அப்போதைய பிரான்ஸ் நாட்டு சட்டப்படி மரண தண்டனை கில்லட்டின்(Guillotin) எனப்படும் தலைவெட்டும் இயந்திரம் மூலம் நிறைவேற்றபட்டது. இந்த இயந்திரத்தைக் கண்டுப்பிடித்த Dr.கில்லட்டின் கருத்துப்படி “மரண தண்டனைப் பெறுபவர் தன் கழுத்தில் மெல்லிய குளிர்ச்சியை மட்டுமே வெட்டப்படும் போது அறிவார்” எனக் கூறியிருக்கிறார். ஆனால் மருத்துவ அறிக்கை, தலை துண்டிக்கப்பட்ட பிறகும் முக்கியமான உடல் உறுப்புகள் தொடர்ந்து தாக்குப்பிடிக்கின்றன எனக் கூறுகிறது. தண்டனையை நிறைவேற்றுபவரின் கூற்றுப்படி, "தலை துண்டிக்கப்பட்ட உடல் 20 நிமிடங்களுக்குப் பிறகும் மயானத்தில் புதைக்க எடுத்துச் சென்ற போது துடித்துக் கொண்டிருந்தது" என்கிறார்கள். “இப்படி ஒரு கோரமான, முன்னுதாரணமான தண்டனை வருங்காலத்தில் குற்றம் செய்ய துனிபவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறு. அவை எக்காலத்திலும் குற்றங்கள் குறைவதற்கு துணை புரிந்ததில்லை.” என்கிறார் ஆல்பெர் காம்யு. மேலும் “குற்றம் புரிந்தால் தன் தலை இப்படி துண்டிக்கப்படும் என மக்களுக்கு தெரிய வேண்டுமென அரசு நினைத்தால் அதை மக்கள் முன்னிலையில் செய்யட்டும். மாறாக எதற்காக நான்கு சுவற்றுக்குள் இதை செய்ய வேண்டும்? அப்படி நான்கு சுவற்றுக்குள் செய்தால் குற்றம் செய்தவனுக்கு நீதி நிறைவேற்றப்பட்டது என்ற செய்தியை படித்து விட்டு மக்கள் கடந்து போய் விடுவார்கள். அது இவர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது.” என்கிறார்.


மரண தண்டனையை இவர் எதிர்ப்பதற்கு மேலும் சில காரணங்களை அடுக்குகிறார். “குற்றம் புரிந்தவன் திருந்துவதற்கான வாய்ப்பை நீங்கள் மரண தண்டனை கொடுப்பதன் மூலம் மறுக்கிறீர்கள். அவன் திருந்தவே மாட்டான் என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்.” இது மட்டுமல்ல அவரது வாதம்.
பதினான்கு வயது சிறுமி ஒருத்தியை கொன்றதற்காக 1957 மார்ச் மாதம் 15 அன்று பர்டன் அப்பாட் (Burton Abbott) என்பவருக்கு கலிபோர்னியாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்டது. அவர் திரும்ப திரும்ப முறையிட்ட போதும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி 9.10 மணிக்கு அவரது வழக்குரைஞர்கள் ஓர் இறுதி முறையீட்டை செய்வதற்காக அவரது தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிவைப்பதர்க்கு அனுமதி வழங்கப்பட்டது. மரண தண்டனையை ஒத்தி வைக்கச் சொல்லி அந்த கமிட்டியின் செயலாளர் சிறைச் சாலையை நேரடியாக தொடர்பு கொண்ட போது அப்பாட்டின் மரண தண்டனை (விஷவாயு செலுத்துதல்) பாதி நிறைவேற்றபட்டிருந்தது. அப்பாட் மரணமடைந்தார். அவர் இறந்து சிறிது காலம் கழித்து அப்பாட் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். இது போல் சில அப்பாட்கள் தவறான சாட்சிகள் மற்றும் சூழ்நிலையின் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது என்கிறார் ஆல்பெர் காம்யு.


“திருந்தவே மாட்டார்கள்” வகைமையைச் சேர்ந்த கொடூர கொலைகாரர்களை என்ன செய்வது, அப்படியே காலம் முழுக்க சாப்பாடு போட்டு உயிருடன் வைத்திருக்கலாமா? என்ற கேள்வி புத்தகம் படிக்கத் தொடங்கியதிலிருந்தே என்னை உறுத்திக் கொண்டிருந்தது. அதற்கு எழுத்தாளரின் வாதம் “மரண தண்டனையின் இடத்தை ‘கடின உழைப்புத் தண்டனை’ எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு தண்டனைக்கு மரண தண்டனை மேல் என நினைப்பவர்கள் கற்பனைத் திறன் அற்றவர்கள்.” என்பதே. மேலும் “அப்படி ‘கடின உழைப்பு தண்டனை’ முடியாது மரண தண்டனை தான் தர வேண்டும் என அரசு நினைத்தால் அதை கொஞ்சம் அறிவியல் துணையோடு தூக்கத்திலிருந்து மரணத்திற்கு செல்வதைப் போல் இலகுவாக்கி விடுங்கள். இல்லையேல் ஒரு விஷத்தைக் கொடுத்து அதை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அவரிடமே விட்டுவிடுங்கள்.” என்கிறார்.

“இப்படி ஒரு கொலையை செஞ்ச இவன் சாகனும். அவன் எல்லாம் தப்பிக்கவே கூடாது” என பலியானவரின் தரப்பாக இருந்து கொலையாளியின் மரண தண்டனையை நீங்கள் கொண்டாடியிருந்தால் உங்கள் மீதும் எழுத்தாளர் குற்றம் சுமத்துகிறார். இதோ அவரது வார்த்தைகளில்: “பலியானவர் குற்றமற்றவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலியானவரின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் சமூகம் குற்றமற்றது என்று கூறிக் கொள்ள முடியுமா? அதனால் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும் குற்றத்திற்கு ஓரளவுக்கேனும் அது பொறுப்பேற்க வேண்டும்.”

“மரண தண்டனை வேண்டும்” என்ற எனது நிலைபாட்டினை இந்த புத்தகம் முழுவதும் உடைத்தெறிந்துவிட்டது எனக் கூற மாட்டேன். ஆனால் அதன் மீது சிறு விரிசலை எழுத்தாளரின் வாதம் ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒருவேளை புத்தகம் படித்து முடித்து சில மணி நேரங்களே ஆகி இருப்பதால் கூட இருக்கலாம். என்னை உணர்ச்சியவயப்பட வைக்கும் கொலைப் பற்றி வருங்காலத்தில் படிக்க நேர்ந்தால், அந்த பலியானவரின் பிரதிநிதியாக என்னை மீண்டும் நினைத்துக் கொண்டு “இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கண்டிப்பா சாகனும்” என்றே உரைப்பேன் என நினைக்கிறேன்.


மொழிபெயர்ப்பு தத்துவார்த்தமாக இருந்ததால் 70 பக்க புத்தகத்தை படித்து முடிக்க எனக்கு ஒரு வார காலம் ஆகிவிட்டது. அவரின் வாதங்களை முழுவதும் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றே மிக நிதானமாக படித்து முடித்தேன். 1957 ஆல்பர்ட் காம்யு பிரெஞ்சு மொழியில் எழுதி ஆங்கிலத்தில் "Reflections on the Guillotine" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பை பரிசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள் மரண தண்டனை குறித்தான ஒரு புது பார்வை உங்களுக்குள் தோன்றும்.


Posted on முற்பகல் 8:26 by Elaya Raja

No comments

புதன், 17 ஜனவரி, 2018

வைக்கம் முகமது பஷீரின் படைப்பொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை. ஆனால் படிக்கத் தொடங்கும் முன் "ஒரு மாபெரும் படைப்பாளியின் எழுத்தை வாசிக்க போகிறோம்" என்ற முன்முடிவுடனே தொடங்கினேன். காரணம் சமீபமாக பஷீர் பற்றிய நிறைய பதிவுகளை இங்கு முகப்புத்தகத்திலும் வெளியேயும் வாசித்தேன். "புனைவுலகின் சுல்தான்" என்றெல்லாம். அதனாலேயே ஐந்து வருடங்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் படிக்கப்படாமலேயே இருக்கும் போது, நேற்று வாங்கிய இதனை இன்றே படித்து முடித்தேன்.
எனக்கு எப்போதுமே மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றாலே ஒரு தயக்கம் தான். காரணம், அதன் மொழிநடை ஒரு மாதிரி கடினமாக இருக்கும் என்பதே. ஆனால் சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் "நாலுகட்டு" நாவலை சிவன் மொழிபெயர்ப்பில் படித்ததும் நான் கொண்டிருந்த எண்ணம் கொஞ்சம் மாறியது. மேலும் "மதில்கள்" மொழிபெயர்ப்பு கவிஞர் சுகுமாரன் என்பதால் நிச்சயம் ஏமாற்றம் இருக்காது என்று நம்பினேன் (அவருடைய கவிதைகளை இதுவரை வாசித்திராத போதும்.)

தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அது ஒரு சில பக்கங்களே. பிறகு பஷீரின் எள்ளலும், குதூகலமும் நிறைந்த கதையாடல் அட்டகாசமாக இருக்க குறுநகையுடன் வாசிக்க தொடங்கினேன்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறார் பஷீர். அங்கு அவரைப் போன்றே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனி பிளாக்-ல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆண்கள் சிறைக்கு பக்கத்திலேயே , பெரிய கல் மதிலைத் தாண்டி பெண்கள் சிறை இருக்கிறது. அங்கிருக்கும் நாராயணி என்ற பெண்ணுக்கும் பஷீருக்கும் ஏற்படும் நெருக்கமே மதில்கள்.

பஷீருக்கு சிறையில் ஏற்பட்ட சின்ன அனுபவம் தான் இந்த "மதில்கள்". ஆனால் "கதைசொல்லியாக" ஒரு  பேரனுபவத்தை நமக்கு "அனாயசமாக" அளித்துச் செல்கிறார். செடி கொடிகளுடனும், அணில்களுடனும் அவர் உரையாடல் நிகழ்த்துகிறார். இயற்கையை மிகவும் நேசித்து வாழ்ந்த மனிதர் போலும்.  மிகச் சுலபமாக மனிதர்களை தன் வசமாக்கிவிடுபவர் என்பது "நாவலில்" மட்டுமல்ல பின்னிணைப்பிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரையின் மூலமும் நிரூபணமாகிறது.

பஷீரின் கண்களின் வழியாகவே நாம் "மதில்களின்" உலகத்தை பார்க்கிறோம். இரும்பு கம்பி போட்ட சிறை அறையையும், அவர் அமைத்த பூந்தோட்டத்தையும், மரத்திலேறி தாவி ஓடும் அணில்களையும். அதனால் மதிலுக்கு அந்த புறம் இருக்கும் பஷீர் பார்க்காத "நாராயணியை" நாமும் பார்க்க முடிவதில்லை. அதுவே பஷீரின் உணர்வினை நமக்கும் கடத்துகிறது.
"மதில்கள்" நாவலைப் போலவே பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கும், நாவல் எழுதப்பட்ட சூழலை உடனிருந்து பார்த்த பழவிள ரமேசனின் "மதில்களின் பணிமனை" கட்டுரையும், "மதில்கள்" நாவலை திரைப்படமாக்கிய எம்.டி.வாசுதேவன் நாயரின் கட்டுரையும் படுசுவாரஸ்யமாக இருந்தன.

பஷீர் - அறிமுகத்திலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கிறார். இன்னும் இந்த "சுல்தான்" பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

Posted on முற்பகல் 9:48 by Elaya Raja

No comments

செவ்வாய், 16 ஜனவரி, 2018

தி.ஜானகிராமனின் “உயிர்த்தேன்” நாவலை வாசித்தேன். இதற்கு முன்பு இவருடைய “மரப்பசு” நாவலை வாசித்திருக்கிறேன். அது பல பேருடைய பாராட்டுதலுக்கும் விருப்பப்பட்டியலிலும் இருப்பதைக் கண்டு, நான் வாசிப்பதற்கு முன்பே நண்பர்களுக்கு பரிந்துரை செய்து என் புத்தகத்தை இரவலாகத் தந்தேன். ஆனால் இருவரும் சொல்லி வைத்தார் போல் 20 பக்கங்களை கூட தாண்டாமல் “வாசிப்பதற்கு கடினமாக” இருப்பதாக கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்படி என்ன கடினமாக இருக்கிறது என்று “மரப்பசுவை” நானும் வாசிக்கத் தொடங்கினேன்.

“ஆமா.. தி.ஜா. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்காரு..” என தனிமையில் சொல்லிக் கொண்டே “மரப்பசுவின்” அம்மணியை வாசித்து முடித்தேன். அம்மணியை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். “மரப்பசுவை” படித்து முடித்ததும் “நல்லா இருக்கு.. ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்பதே தி.ஜா.வின் எழுத்து பற்றிய என் மதிப்பீடாக இருந்தது.

ஆனால் “உயிர்த்தேன்” படிக்கத் தொடங்கியதும் தி.ஜா. பற்றிய என் மதிப்பீடு முற்றிலும் மாறிப்போய்விட்டது. “மனிதர் இப்படி கிறங்கடிக்கும்படி எழுதக் கூடியவரா?” என வியந்து, “அதனால் தான் தி.ஜா.வை நிறைய பேர் கொண்டாடுகிறார்கள்” என என் புதிய மதிப்பீடுக்கு நியாயம் சேர்த்துக் கொண்டேன்.

“உயிர்த்தேன்” நாவலில் ஆறுகட்டியை வர்ணிப்பதிலும், அவர் படைத்த மனிதர்களின் குணநலன்களை வாசகனுக்கு கடத்துவதிலும், சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்ற கதாபாத்திரங்களை உரையாடல்களிலும் என்று மனிதர் புகுந்து விளையாடுகிறார்.

“மரப்பசு” நாவலில் அம்மணி போல் “உயிர்த்தேன்” நாவலில் செங்கம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரம். தி.ஜா. வின் எழுத்து வாசகனையும் அவளை விரும்ப வைத்துவிடுகிறது. அவளுக்கு நாவலில் எந்த தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை கொடுத்துவிடுகிறது.

செங்கம்மா கதாப்பாத்திரத்தைத் தாண்டி பட்டணத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊருக்கும் செங்கம்மாவின் பேச்சைக் கேட்டு ஊர் மக்களுக்கும் நல்லது செய்யும் பூவராகன், மனைவின் மீது மதிப்பும் அவளது புத்திக் கூர்மையை வியந்தும் பார்க்கும் கணேசப்பிள்ளை, பூவராகன் மீது சிறுவயதிலிருந்து அன்போடு பழகி வரும் நண்பனும் மாமன் மகனுமாகிய நரசிம்மன், இன்னொரு பெண் பேச்சைக் கேட்டு நடக்கிறாரே என கணவன் மீதும் “இவள் யார் என் வீட்டை அதிகாரம் செய்ய” என்று செங்கம்மா மீதும் துளியும் வெறுப்பு கொள்ளாத பூவராகனின் மனைவி ரங்கநாயகி, ஊரே ஒத்துப்போனாலும் பூவராகனின் மீது வெறுப்போடு இருப்பதும் முடிவில் திருந்தி வருந்தும் பழனிவேலு என அனைவரும் “தி.ஜா.வின்” எழுத்து மூலம் உயிர் பெற்று நாவல் முழுவதும் நடமாடுகிறார்கள்.

இத்தனை இருந்தாலும் நாவல் வாசிக்கும் பொது “விக்ரமன் படம்” மாதிரி இருக்கே என்று தோன்றாமலும் இல்லை. காரணம் நாவலில் வரும் அனைவருமே நல்லவர்கள். பூவராகனை முறைத்துக் கொண்டே திரியும் ஒரே நெகட்டிவ் கதாப்பாத்திரமான பழனிவேலு கூட. வாசகனின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டே வரும் பழனிவேலும் முடிவில் மனம் திருந்தி எழுதும் ஒரு கடிதத்தில் கணேசபிள்ளை, செங்கம்மாவோடு சேர்ந்து நம்மையும் கண் கலங்க செய்துவிடுகிறார்.

“மரப்பசுவின்” அம்மணிதான் இந்த நாவலில் வரும் அனுசூயாவா எனத் தெரியவில்லை. அந்த கதாப்பாத்திரமும் நாவலின் மையக் கருத்தான “சக மனிதர்கள்” மீது அன்பினை பொழிய வேண்டும் என்பதற்கு வலு சேர்க்கிறது.

நாவல் முழுவதும் அன்பு பற்றியே பேசியிருக்கும் தி.ஜா. நிஜ வாழ்வில் எப்படி சக மனிதர்களோடு பழகியிருப்பார் என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுகிறது.

நாவலில் அனுசூயா கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் சொல்லும், “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி என்று”. அதற்கு அர்த்தமாக “10 தவளையை தராசுல நிறுத்த முடியுமா. ஒண்ண வச்சி இன்னொன்னு எடுக்குறதுக்குள்ள முன்னாடி வச்சது தாவி ஓடிடும். அந்த மாதிரி என் மனசுல இருக்குறத வார்த்தைல சேர்த்து சொல்ல முடியாதபடி ஒவ்வொண்ணும் தாவி ஓடிடுது" என்று. அதுபோல இத்தனை பெரிதாக எழுதியும், இந்த நாவலின் அனுபவத்தை சொல்ல எனக்கு “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி தான் இருக்கு”.

தி.ஜா. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர் தான்.

Posted on முற்பகல் 11:13 by Elaya Raja

No comments

திங்கள், 8 ஜனவரி, 2018

இந்த வருடத்தில் படித்து முடித்த முதல் புத்தகம், சுஜாதாவின் "தூண்டில் கதைகள்". ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்கும் அவருடைய இந்த  "தூண்டில் கதைகளை" அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். ஆனால் 10 சிறுகதைகள் அடங்கிய தொகுதியை படிப்பது இதுவே முதல் முறை. 


சுஜாதாவின் கதாபாத்திர வர்ணனையும் கதாபாத்திரங்களின் உரையாடலும் படிப்பதற்கு எப்போதும் வசீகரமானவை. உரையாடல்களை படிக்கும் போது ஒருவேளை இது 2000-க்கு பிறகு எழுதப்பட்டதோ என நினைக்கும் அளவிற்கு அவருடைய பழைய கதைகளும் அத்தனை "ப்ரெஷாக" இருக்கும். 

"யாருக்கு" என்ற சிறுகதையில் கதை நடக்கும்  வருடம் எதையும் முதலில் குறிப்பிடாமல் "வெப்ஸ்டர்" எனும் சிங்கப்பூரின் பெரும் நிறுவனத்திற்கு  அடுத்த தலைமை பொறுப்பாளர் யார்  என்ற கேள்வியோடு கதையை  நகர்த்திக் கொண்டு செல்லும் சுஜாதா, அதன் முடிவினை "போபால் விஷவாயு" விபத்தோடு இணைத்து முடித்தது அந்த கதையின்  உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேட வைத்தது. உண்மையாகவே "வெப்ஸ்டர் கார்போரேஷன்" என்ற பெயரில் ஒரு  சிங்கப்பூர் நிறுவனம்,  போபால் பேரழிவிற்கு காரணமான "யூனியன் கார்பைடு நிறுவனத்தோடு கூட்டணி வைத்திருந்ததா என்று தேடிப்பார்த்தேன். ஒரு பெரும் நிறுவனத்தில் நடக்கும் "அதிகாரப் போட்டி அரசியல்" போல் இருந்த கதைக்குள் இப்படி ஒரு "தூண்டிலை" இணைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம். 

"சுயம்வரம்" என்ற சிறுகதை கொஞ்சம் முற்போர்க்குத்தனமாகவும், பெண்ணியம் பேசுவதை போலவும் எனக்கு தோன்றியது. இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்களில் ஒருவரான சுரேஷ் மெக்லானியின் பெண் சுரேகாவைத் திருமணம் செய்ய இரண்டு இளைஞர்கள் விரும்புகிறார்கள். அவளது தந்தை தேர்வை அவளிடமே விட, இருவரும் எல்லாவற்றிலும் சரிசமமாக இருக்க பெரிதும் குழம்புகிறாள். அப்போது தன் தாயோடு விவாகரத்து செய்து கொண்ட  தந்தை இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைப்பது தெரிந்து அவரிடம் அது குறித்து கேட்கிறாள். "இருவரையும் சந்தோஷமாக வைத்திருக்கும் போது இரண்டு திருமணம் தப்பில்லை" எனும் தத்துவத்தை தந்தை  உதிர்க்க, முடிவில் அந்த இரண்டு இளைஞர்களையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அடுத்தடுத்த நாட்களில் அதிக ஆடம்பரமில்லாமல் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். "நான் சுதந்திரமாக வளர்ந்தவள். திருமணத்திற்கு பிறகு எங்கிருந்து வருகிறாய், எங்கு போயிருந்தாய் போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கக்கூடாது" எனும் நிபந்தனையோடு இருவரையும் தனித்தனியே அழைத்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறாள். இந்த சிறுகதை வெளிவந்த சமயம் ஏதேனும் அதிர்வலையை ஏற்படுத்தியதா அல்லது வெறும் 'வணிக சிறுகதை" எனும் பார்வையில் கலாச்சார காவலர்கள் இதனை கடந்து போய்விட்டார்களா எனத் தெரியவில்லை.

அதே போல சோழப் பின்னணியில் எழுதப்பட்ட கதையின் முடிவு நகைச்சுவையாகவும், "மற்றொரு பாலு" என்ற சிறுகதை "The Prestige" படத்தை நினைவுப்படுத்துவதாகவும் இருந்தது. 

இந்த வருட வாசிப்பை  சுஜாதாவோடு  தொடங்கியதில் "மகிழ்ச்சி".

Posted on முற்பகல் 6:44 by Elaya Raja

No comments

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மோகன்ராஜாவின் "வேலைக்காரன்" திரைப்படம் அவரது முந்தைய மாபெரும் வெற்றிப்படமான "தனிஒருவன்" காரணமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியிருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறையை  இந்த படத்திலும் மோகன் ராஜா அவர்கள் படம் முழுவதும் காட்டியிருக்கிறார். மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் யாரும் பேசாத களத்தை, சிவகார்த்திகேயன், நயன்தாரா, பாகத் பாசில், ஸ்னேகா, பிரகாஷ்ராஜ், RJ பாலாஜி எனும் நடிகர் பட்டாளம் கொண்டு சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ கதைக்களம் தான். உணவே விஷமாகிப் போன இன்றைய அவசர உலகில் உணவு சார்ந்த வியாபாரம் செய்யும் பெரும் நிறுவனங்களின் தகிடுதத்தங்களை தோலுரிக்கும் படம் தான் இந்த "வேலைக்காரன்". இப்படியொரு கதைக்களம் பிடித்த மோகன் ராஜா "தனி ஒருவனுக்கு" பிறகு என்னுடையப் படம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள தகுந்த படமிது. "தனி ஒருவன்" படத்திற்கு அவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும், பாராட்டுகளும் அவருக்குள் மிகவும் ஜாக்கிரதை உணர்வையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. அந்த பொறுப்பு இந்த படத்தில் நன்றாகவே தெரிகிறது. 


வேலைக்காரன் திரைப்படம் சிவாவின் திரைவாழ்க்கையில் நிச்சயம் மிக முக்கியமான திரைப்படம் தான். வெறும் காமெடி, நடனம், காதல் என்று நேரத்தை சாதாரணமாக கடத்திச் சென்று விடும் கதாபாத்திரம் அல்ல இந்த படத்தின் "அறிவு". தான் பிறந்து, வளர்ந்த குப்பமும், குப்பத்து ஜனங்களும் உயர வேண்டும் என நினைக்கும் நல்ல இளைஞன். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் பொறுப்பான மகன். உணவு எனும் பெயரில் விஷம் உண்ணும் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சிறந்த குடிமகன். ரஜினி, விஜய் பாணி படங்கள் சிவாவிற்கு சிறப்பான, செழிப்பான வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் படத்துக்கு படம் தன்னை மெருகேற்ற வேண்டுமென நினைக்கும் சிவா பாராட்டப்பட வேண்டியவர்.

சரி. இத்தனை சிறந்த கதைக்களத்தை கொண்ட படம்  முடிவில் முழு திருப்தி கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியிருக்கிறது. இதோ எனக்கு முழு திருப்தி கிடைக்காமல் போனதற்கான காரணங்களாக நான் நினைப்பவை:
1) கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வதைப் போல் வந்து கொண்டே இருக்கும் வசனங்கள். ஒன்றை வாங்கி நன்றாக கிரகிப்பதற்குள் அடுத்த வசனம் என பேசி பேசியே  நம்மை டயர்ட்டாக்குகிறார்கள்.
2) சரியாக பொருந்தாமல் துருத்திக் கொண்டு தெரியும் எடிட்டிங். சில காட்சிகள் படக்கென முடிந்து அடுத்த காட்சி ஆரம்பிக்கிறது. இதனை உன்னிப்பாக கவனித்துக் குறையாக சொல்லவில்லை. சாதாரணமாகவே தெரிகிறது.
3) லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சரியாக உபயோகிக்காமல் வீணாக்கியது. குறிப்பாக சிவா-நயன் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒட்டவில்லை. சிவாவும் ஏதோ ஸ்கூல் டீச்சரைப் பார்த்து ஒதுங்கி நிற்பது போல் ஒரு வித தயக்கத்துடனே நயனை அணுகுகிறார். 
4) காமெடி காட்சிகளில் புகுந்து விளையாடும் சிவா, சீரியசான சில காட்சிகளில் சிறப்பாக நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.

மொத்தத்தில் "தனி ஒருவனில்" மோகன் ராஜா நிகழ்த்திய மேஜிக் "வேலைக்காரனில்" கொஞ்சம் மிஸ்ஸிங்.

Posted on பிற்பகல் 12:45 by Elaya Raja

No comments

எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு” என்ற நாவலை வாசித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக விரைவாகவும், மிக ஆர்வத்துடனும் படித்து முடித்திருக்கும் ஒரு நாவல். 

எம்.டி. வாசுதேவன் - பள்ளி ஆசிரியர், நாவலாசிரியர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ஆளுமை. இவர் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பினும் நான் வாசித்த இவரது  முதல் நூல் இதுதான். மலையாள சினிமாவின் தரம் உயர்த்திய இயக்குனர்களில் ஒருவரான இவர் பல தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். அவரது முதல் நூலான இந்த நாலுகட்டு நாவலை எழுதும் போது அவரது வயது 23 தான்.


டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” தமிழ் மொழிபெயர்ப்பு படித்துவிட்டு இனி மொழிபெயர்ப்பு நூலே வாசிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அத்தனை மோசமாக மொழிபெயக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். ஆனால் அதன் பிறகு நான் வாசித்த எழுத்தாளர் முருகவேள் மொழிபெயர்த்திருந்த “எரியும் பனிக்காடு” நாவல் அற்புதமான வாசிப்பனுபவத்தை கொடுத்தது. அதைப் போலவே எழுத்தாளர் சிவன் அவர்கள் இந்த நாலுகட்டு நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்ந்து நான்கு மணிநேரம் உட்கார்ந்து வாசிக்கும் அளவிற்கு “தன்னுள்” என்னை ஈர்த்துக் கொண்டது நாவல்.

1958-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவல், 1972-ஆம் ஆண்டு வரை கேரளத்திலும், தமிழகத்தின் தென் கோடி மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்த மருமக்கத் தாயம் என்ற முறையை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டது. “மருமக்கத் தாயம்” முறைப்படி குடும்பத்தின் சொத்துக்கள் பெண்களுக்கே உரியவை. ஒரு வீட்டில் ஆண்களும் பெண்களும் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் மூத்த ஆண் மகன் இந்த சொத்துகளை நிர்வகிக்கவும், கையாளவும் அனுமதிக்கபாடுவார். அவர் “காரணவர்” என்று அழைக்கபடுவார். அவர் தான் அந்த குடும்பத்தின் தலைவராக கருதப்படுவார். அவரது காலத்துக்குப் பிறகு, அவர் சகோதரிகளில் மூத்த மகன் “காரணவர்” ஆக்கப்படுவார். இவ்வாறு தாய்மாமாவுக்குப் பிறகு, மருமகன் சொத்துரிமை பெறுவது “மருமக்கத் தாயம்” எனப்பட்டது. இந்த முறை 1972-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, “நாயர் ரெகுலேஷன் ஆக்ட்” சட்டத்தின் படி மருமக்கத் தாயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நாவல் அப்புண்ணி என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியே விவரிக்கப்படுகிறது. வீட்டு வேலையும் தோட்ட வேலையும் செய்து அவனை படிக்க வைக்கும் அவனது அம்மா பாருக்குட்டி, அப்பாவை விஷம் வைத்து கொன்றதால் வளர்ந்து பெரியவனானதும் அவன் பலிவாங்கத் துடிக்கும் செய்தாலிக்குட்டி, அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் உதவ வரும் திருமணம் செய்து கொள்ளாத சங்கரன் நாயர், அப்புண்ணிக்கு அவனது அப்பாவின் தாயத் திறமையை பற்றியும் அவனது பெற்றோர் திருமணம் குறித்தும் செய்தாலிக்குட்டி அவனது அப்பாவிற்கு விஷம் வைத்தது குறித்தும் சொல்லும் முத்தாச்சி பாட்டி, அவனை எப்போதும் ஆதரவாக பேசியபடி நெருங்கும் பாவப்பட்ட மாளு, அவனை “நாலுகட்டு” வீட்டிலிருந்து அடித்து விரட்டும் பெரிய மாமா, அவனை நினைத்து மருகும் பாட்டி, அவனது அறைக்குள் வந்து அவனை கனவுலகம் அழைத்துச் செல்லும் பெரிய மாமாவின் பெண் அம்மினியக்கா என்று எல்லா கதாப்பாத்திரங்களும் அப்புண்ணி வழியாகவே நமக்கு அறிமுகம் ஆகிறார்கள். அப்புண்ணி ஆரம்பம் முதலே துன்பங்களை சுமந்த வண்ணம் இருந்தாலும் முடிவில் அவனுக்கு உயர்ந்த நிலை அடைகிறான். ஆனால் நாவல் முழுதும் துன்ப ஜென்மங்களாக தெரிந்த கதாப்பாத்திரங்கள் கணவனையும், ஒரே ஆதரவான பிள்ளையையும் இழந்து தவிக்கும் அவனது அம்மா பாருகுட்டியும், சந்தோஷமே அறியாத வீட்டு வேலை செய்தபடியே திரியும் மாளுவும், சமையலறையே கதியாய் கிடக்கும் மீனாக்ஷியக்காவும்.

முதலில் சற்று சிரமமாகத் தெரிந்த சில மலையாள வார்த்தைகள் போகப்போக உறுத்தாமல் உட்கார்ந்து கொண்டன. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களின் சூழ்நிலையை அவர்கள்  தரப்பு நியாயத்தோடு மட்டுமே அணுகுவதும் அதற்க்கு மற்றவர்களின் எதிர்வினையும் என்று வெகு இயல்பான கதையோட்டம் நாவல் முழுவதும்.  நல்லதொரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் நாவல்.

Posted on முற்பகல் 8:28 by Elaya Raja

No comments