க.சுதாகர் அவர்கள் எழுதிய “6174” என்ற அறிவியல் புனைவினை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அந்த நாவல் பற்றி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பாராட்டுப் பதிவுகள் பார்த்ததால் போன வருட புத்தக கண்காட்சியின் போது “6174” நாவலை வாங்கினேன். அதனை வாங்கும் போது அருகில் இருந்த அவரது இரண்டாவது நாவலையும் வாங்கிவிட்டேன். முதல் நாவல் நல்ல பாராட்டு பெற்ற நாவல். அதனால் நிச்சயம் இரண்டாவது நாவலையும் அதேப் போன்ற சிரத்தையுடன் எழுதி இருப்பார் என்ற அனுமானத்தில் வாங்கினேன். என் அனுமானம் சரியாகவே இருந்ததது. ( நீண்ட நாட்கள் கழித்து நான் ஒரே நாளில் வாசித்து முடித்த புத்தகம் இது என்பது இங்கு சொல்ல தேவையில்லாத என் அரிய சாதனை.)


நான் லீனியர் திரைப்படம் போல ஆரம்பிக்கிறது நாவல். குஜராத் வேலவதார் காட்டில் ஓநாய் கூட்டத்தில் நடக்கும் சண்டையை ஓநாய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு பெண் காண்பதாய் ஆரம்பிக்கும் கதை பெங்களூரில் தீவிரவாதிகள் போன்ற குழு ஒரு வீட்டில் தற்கொலைப் படையாய் மாறி வீட்டை சுற்றி போலீஸ் இருக்கும் போது வெடிகுண்டை வெடிக்க செய்வது, அந்த தற்கொலைப் படையின் தலைவன் விக்ரம் பத்ரா என்ற ராணுவ அதிகாரிக்கு தன் குதத்தில் சொருகிய சிறு காகிதத்தின் மூலம் நாட்டில் நடக்கப் போகும் மாபெரும் அழிவிற்கு Clue கொடுத்து விட்டு செல்வது, அந்த புதிரை அவிழ்க்க அவர் முயல்வது, அதற்க்கு உறுதுணையாக எம்.ஜி.கே., வித்யா, திவாகர் ஒவ்வொருவராக இணைவது, என அடுத்தடுத்து விறுவிறுப்பாக பறக்கின்றன பக்கங்கள்.

ஏனோ தானோவென்று வாசிக்க முடியாத நாவல் இது. நமது முழு கவனத்தையும் கோருகிறது நாவல். ஏகப்பட்ட அரிய அறிவியல் தகவல்கள், புரியாத இயற்பியல், வேதியியல் இன்னும் புரிபடாத பல இயல்கள் நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கின்றன. இப்படியெல்லாம் நிஜமாகவே இருக்கிறதா என படித்து முடித்ததும் “Google” ஆண்டவர் துணைக் கொண்டு தேடும் அளவிற்கு நம்மை ஆட்கொள்கிறது நாவல். “இது எதுக்கு இப்படி”, “அது யாரு”, “இது எப்படி நடந்திருக்கும்” என கேள்விகள் தோன்றியபடியே இருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவிழும் முடிச்சுகள் சுவாரசியமாக இருந்தன.

இப்படி ஒரு நாவல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் இந்நேரம் இது திரைப்படமாக திரையரங்கை தொட்டிருக்கும். ஆனால் தமிழ் சூழலில் வாய்ப்பே இல்லை. அதனால் இதை படித்தே திரைப்பட உணர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தான்.